கட்டுரை

தோல்விக்கு என்ன காரணம்?

செல்வன்

நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றாலும்கூட   நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கக்கூடிய அரசியல்வாதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒருவர்தான்.

தலைக்குவந்தது தலைப்பாகையோடு போனது என்பார்களே.. அதுபோல நாடாளுமன்றத்தில் இடம் பிடிக்க முடியாமல் போனாலும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களில் வென்று ஆட்சியைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார், அவர்.

இன்னும் ஒரு சில இடங்கள் குறைவாகப்  பெற்றிருந்தால் நிச்சயம் ஆட்சிக்கு ஆபத்து வந்திருக்கும். இந்தத் தேர்தல் முடிவுகளுக்கு என்ன அர்த்தம்?

" தமிழ்நாடே மோடிக்கு எதிராக வாக்களித்தது. ஆனால் சட்டமன்றம் என்று வரும்போது, அதிமுக ஆட்சியே தொடரட்டும் என்று முடிவு செய்தது. அதிமுக ஆட்சியைக் கலைப்போம் என்று டிடிவி ஆகட்டும்; திமுக ஆகட்டும் உரத்தகுரலில்
சொன்னதை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை! இன்னும் இது அம்மா ஆட்சிதான் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவேதான் அமமுகவால் பெருமளவு அதிமுக வாக்குகளைப் பிரித்து அவர்களைத் தோற்கடிக்க முடியவில்லை!'' என்று சொல்கிறார், அரசியல் நோக்கர் ஒருவர்.

டிடிவி தினகரனின் கடுமையான சவாலையும் அரசுக்கு எதிரான பொதுமக்கள் உணர்வுகளையும் சமாளித்து எடப்பாடியார் தன் தாக்குப்பிடிக்கும் திறனைக் காட்டி இருக்கிறார். இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்திருக்கும்  மோடியுடன் தொடர்ந்து நல்லுறவு பேணுவதன் மூலம் அவர் இன்னும்
சிறப்பாகக் காய்களை நகர்த்தக்கூடும்.

அமமுக நிலை? சுமார் பத்துசதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட கட்சி ஐந்து சதவீதத்துடன் திருப்திப்பட வேண்டியதாயிற்று. தொண்ணூறு விழுக்காடு அதிமுக தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்று டிடிவி தினகரன்
சொல்லிவந்தது பலிக்கவில்லை! ஆனால் அவர் இன்னும் கடுமையாகப் பணி செய்வார். இந்த சறுக்கல்களிலிருந்து  மீண்டு வருவார். அவருக்கு இன்னும் வயது இருக்கிறது என்று சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். சிறையில் இருக்கும் சசிகலா தண்டனை முடிந்து வரும் வரை இப்போதிருக்கும் ஆதரவாளர்களை தக்கவைத்துக்கொள்வதே அவருடைய முக்கிய வேலையாக இருக்கும். 2021
சட்டமன்றத் தேர்தலில் அவர் முக்கியப் பங்கு ஆற்றலாம்!

நகர்ப்புறங்களில் கணிசமாக வாக்குகளை வாங்கி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார், கமலஹாசன். டார்ச் லைட் வாங்கிய வாக்குகள் எந்தத் தொகுதியின் முடிவுகளையும் தீர்மானிக்கவில்லை என்றாலும் ஒரு
 சாராரின் கவனத்தை அவர் ஈர்த்திருப்பது புலனாகிறது! நாம் தமிழர் கட்சி கடந்த
சட்டமன்றத் தேர்தலில் பெற்ற 1.8
சதவீத வாக்குகளை 3.8 சதவீத வாக்குகளாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் பலம் வாய்ந்த சக்தியாக ஆவதற்கு இன்னும் நீண்டகாலம் தாக்குப் பிடிக்கவேண்டியிருக்கும்!

இந்தத் தேர்தலில் இரண்டு கட்சிகள் நிச்சயம் கவலைப்படவேண்டும்! ஒன்று பாமக! வன்னியர்களின் கோட்டையான தர்மபுரியிலேயே மோடி எதிர்ப்பு என்ற சுனாமியால் தோற்றுப்போயிருக்கிறார் அன்புமணி, ராமதாஸ்!  சில ஆண்டுகளாகக் காட்டிவந்த திராவிடக் கட்சி எதிர்ப்பைத் தூக்கிப் போட்டுவிட்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தது எந்தப் பலனையும் கொடுக்க வில்லை! அவர்களுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை என்பது உண்மைதான்! ஆனால் இவர்களுடன் வைத்த கூட்டணி அதிமுகவுக்கு அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இரு தொகுதிகளை இடைத்தேர்தலில் வெல்ல உதவி இருக்கிறது! மாநிலங்களவை பதவியை ஒப்பந்தப்படி அதிமுக அளித்தால் அது ஒன்றே அவர்களுக்குக் கிடைத்த லாபம்!

தேமுதிக நிலைமைதான் படுமோசம்! பாஜகவின் தலையீடுதான் கடைசிநேரத்தில் திமுகவுடனும் பேரம்பேசிய இக்கட்சியை அதிமுக கூட்டணியில் 4 இடங்கள் கொடுத்து
சேர்க்க வைத்தது. கேப்டன் விஜயகாந்த் நலமில்லாமல் இருக்கும் நிலையில் மிக மோசமான வாக்குகளைப் பெற்று அக்கட்சியின் வேட்பாளர்கள் தோற்றுப்போயிருக்கிறார்கள்! அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியின் பேரம்பேசும் திறனையே இது சுத்தமாக அழித்துவிட்டது எனலாம்!

2004 - ல் பெற்ற ஐந்து தொகுதிகள் என்ற எண்ணிக்கையையே இந்த முறையும் அதிமுக கூட்டணியில் பெற்ற பாஜக சென்ற முறை வென்ற கன்னியாகுமரி தொகுதியையும் கோட்டை விட்டு விட்டது! இம்முறையும் தமிழ்நாட்டில் காலூன்ற பாஜகவால் இயலவில்லை! நாங்கள் வென்று இருந்தால் தமிழகத்துக்கு உருப்படியாக செய்திருக்க முடியும் என்று  வருத்தப்படுகிறார், தமிழிசை சௌந்தரராஜன்.

"பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் தேசவிரோதசக்திகளும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தமிழகத்தில் தொடர்ந்து செய்த பொய்ப் பிரசாரம்தான் இந்தத் தோல்விக்குக் காரணம். ஆனால் இவற்றை மாநில அதிமுகவின் துணையுடன் எதிர்ப்
பிரசாரம் செய்து எதிர்கொள்வதன் மூலம் அடுத்த கட்டத்துக்கு நகர்வோம்'' என்கிறார், பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன்.

திரிபுராவை இடதுசாரிகளிடம் இருந்து கைப்பற்றியதுபோல, மேற்குவங்கத்துக்குள் நுழைந்ததுபோல, திராவிடக் கட்சிகளிடம் இருந்து தமிழகத்தைக் கைப்பற்ற மேலும் தீவிரமாக முயற்சி செய்வதுதான் இந்த அரசியல் சூழலில் பாஜகவின் எதிர்வினையாக இருக்கும்.

ஜுன், 2019.